Home � � லேப்டாப் கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்கள்

லேப்டாப் கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்கள்

பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் தற்போது லேப் டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை உயர்ந்து20 வருகிறது. பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்பதனை உணரத் தொடங்கி உள்ளனர். பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகங்களே மாணவர்களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் நிறுவனங்களுடன் பேசி சலுகை விலையில் இவற்றை வாங்கித் தரும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.
லேப் டாப் கம்ப்யூட்டர் மட்டும் வாங்கிவிட்டால் போதாது. இது
ஒன்றும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் அல்ல. பல இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் ஒரு சாதனம். செல்லும் இடங்களில் உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்திற்கு துணை சாதனங்கள் தேவைப்படலாம். அதனைப் பத்திரமாகப் பாதுகாக்க வேறு சில கருவிகளும் தேவைப்படலாம். எனவே லேப் டாப் வாங்கிய கையோடு அவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.
1. சர்ஜ் புரடக்டர் (Surge Protector): பயணம் செல்லும் இடங்களிலெல்லாம் நமக்குச் சரியான பாதுகாப்பான வழிகளில் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. கிடைக்கும் வோல்டேஜில் திடீரென அழுத்தம் அதிகமானால் அது லேப்டாப்பின் நுண்ணிய பாகங்களை வறுத்தெடுப்பதோடு உங்களின் உழைப்பில் உருவான டேட்டாவையும் காலி செய்துவிடும். எனவே ஒரு நல்ல சர்ஜ் புரடக்டரை வாங்கி வைத்துக் கொண்டு அதனைப் பயன்படுத்துவது நல்லது. இங்கு நல்ல சர்ஜ் புரடக்டர் என்று சொல்லக் காரணம் இது மின்சக்தியை சரி செய்திடும் சாதனம். ரூ.950க்கு சர்ஜ் புரடக்டர் கிடைக்கின்றன.ஆனால் அவை சரியாக இயங்குவதில்லை. ரூ.3250 என்ற அளவில் நல்ல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு தரமான சர்ஜ் புரடக்டர்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.
நீங்கள் அடிக்கடி வெளிநாடு செல்பவராக இருந்தால் அங்கு என்ன அளவில் மின்சக்தி விநியோகம் செய்யப்படுகிறது என்பதனை அந்த இணைப்புக்கும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள சர்ஜ் புரடக்டரை வாங்குவது நல்லது. லேப் டாப் மட்டுமின்றி வேறு சில டிஜிட்டல் சாதனங்களையும் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்வதால் அதிக அவுட்லெட்கள் உள்ள சர்ஜ் புரடக்டரை வாங்கவும்.
2. செக்யூரிட்டி கேபிள் (Security Cable): செக்யூரிட்டி கேபிள் என்பது நீளமான ஒரு கனமான ஸ்டீல் சங்கிலி. இதன் ஒரு நுனியில் சரியான பூட்டு, பெரும்பாலும் எண்கள் கொண்டு பூட்டும் பூட்டு இருக்கும். அதிக நீளம் இருக்கும் கேபிளைத் தேர்ந்தெடுத்து அதன் பூட்டினையும் சரி பார்த்து வாங்கவும். இதனைப் பயன்படுத்தி நாம் லேப்டாப்பினை எதனுடனாவது இணைத்துப் பூட்டி வைக்கலாம்.
3. யுனிவர்சல் அடாப்டர் (Universal Adapter): வெளியூர்களில் மின்சாரம் பெறக்கூடிய ப்ளக் சாக்கெட்டுகள் வேறு விதமாக இருக்கலாம். இதனால் அருகிலிருந்தும் தொடப் பயந்தேனே என்ற கலைவாணர் ரீதியில் பாட வேண்டியதுதான். லேப்டாப், மின்சாரம், ப்ளக் இருந்தும் பொருந்தாத சாக்கெட் இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையைத் தீர்க்க கடைகளில் யுனிவர்சல் அடாப்டர் என்று ஒரு சாதனம் விற்பனை செய்யப்படுகிறது. இது எந்த வகை சாக்கெட்டிலும் இணையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் நான்கு வகை ஸ்லைடிங் செட் பின்களும் பலவகை சாக்கெட்டுகளும் இருக்கும். உங்களுக்குத் தேவையான ப்ளக் மற்றும் சாக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம்.
4. கூலிங் பேட் (Cooling Pad): லேப் டாப் கம்ப்யூட்டரை ஒரு சிலர் மடிக் கணினி என்று கூறுவார்கள். மடித்து வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மற்றும் மடிமீது வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என இரு வகைகளில் பொருள் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் மடிமீது வெகு நேரம் வைத்துப் பயன்படுத்தினால் லேப் டாப் உள்ளே உருவாகும் வெப்பம் கால் மேல் பகுதியினை சூடு பட வைக்கும். இதனைத் தவிர்க்கப் பல அளவுகளில் கூலிங் பேட்கள் கிடைக்கின்றன. இவை வெப்பத்தினை வெளியேற்றுகின்றன. நம் வீடுகளில் காற்றோட்டமான சூழ்நிலையிலும் கூட இதனைப் பயன்படுத்தலாம்.
5. டிவிடி ரைட்டர் (DVD Writer): பல லேப் டாப் கம்ப்யூட்டர்கள் டிவிடி ரைட்டர் இல்லாமலும் வருகின்றன. ஆனால் நமக்கோ எங்கு சென்றாலும் டிவிடி ரைட்டர் தேவையாய் உள்ளது.இத்தகைய லேப்டாப் வைத்திருப்பவர்கள் தனியே யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தக் கூடிய டிவிடி ரைட்டர் ஒன்றை வாங்கித் தேவைப்படும் போது இணைத்துப் பயன்படுத்தலாம். மிகச் சிறிய ஸ்லிம்மான பல போர்ட்டபிள் டிவிடி ரைட்டர்கள் மார்க்கட்டில் கிடைக்கின்றன. கிடைத்தால் புளு ரே டிஸ்க்குகளையும் பிளே செய்திடும் ரைட்டரை வாங்கவும்.
6. யு.எஸ்.பி. ஸ்பீக்கர்கள் (USB Speaker):லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பீக்கர்களில் எதனையும் தெளிவாகக் கேட்டு புரிந்து கொள்ள முடியாது. எனவே இவற்றில் இணைத்துப் பயன்படுத்த பல நிலைகளில்,பல அளவுகளில் யு.எஸ்.பி. ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. மொபைல் போனுக்குக் கூட இத்தகைய ஸ்பீக்கர்கள் இருப்பதைப் பார்த்திருக்கலாம்.
7. போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ் (Portable Hard Drive): லேப்டாப் கம்ப்யூட்டர்களின் ஹார்ட் டிஸ்க் பெர்சனல் கம்ப்யூட்டர்களோடு ஒப்பிடுகையில் சற்று குறைவான கொள்ளளவு கொண்டவையாகத்தான் இருக்கும். பல லேப்டாப்பில் 80 ஜிபிக்கும் குறைவாக ஹார்ட் டிஸ்க் இருப்பதனைப் பார்க்கலாம். இதற்கு ஒரே வழி எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றைப் பயன்படுத்துவதுதான். பவர் சப்ளை இல்லாத ஹார்ட் டிஸ்க்குகளை வாங்கிப் பயன்படுத்துவது இந்த வகையில் நல்லது.
8. வயர்லெஸ் மவுஸ் (Wireless Mouse): லேப்டாப்பில் உள்ள ட்ரேக் பேட் நம் அவசரத்திற்கு நேவிகேட் செய்வதற்கு வசதிப்படாது. எனவே கூடுதலாக மவுஸ் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. இந்த மவுஸும் வயர்லெஸ் மவுஸ் ஆக இருந்தால் இன்னும் நல்லது. இதில் மவுஸ், உள்ளே இருக்கும் பேட்டரியில் தான் இயங்கும். எனவே அந்த வகை பேட்டரிகள் சிலவற்றை உபரியாக வைத்துக் கொள்வதும் நல்லது.
9. யு.எஸ்.பி. ஹப் (USB Hub): எப்படி நமக்கு எவ்வளவு அளவில் ராம் மெமரி இருந்தாலும் பற்றவில்லையோ அதே போல யு.எஸ்.பி. போர்ட் எத்தனை இருந்தாலும் நமக்குப் போதுமானதாக இருக்காது. மேலும் சில லேப் டாப் கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி.போர்ட்களை அடுத்தடுத்து அமைத்திருப்பார்கள். இதில் இன்டர்நெட் இணைப்பு தரும் சிறிய சாதனம் போன்றவற்றை ஒன்றில் பயன்படுத்தினால் இன்னொன்றில் எதனையும் இணைக்க முடியாது. எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவ ஒரு இணைப்பில் எடுத்து ஒன்றுக்கு மேற் பட்ட யு.எஸ்.பி. இணைப்பினைத் தரும் யு.எஸ்.பி. ஹப் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
10.லேப்டாப் கீ போர்டு விளக்கு (Keyboard Light): சிலர் ட்ரெயின்களில் செல்கையில் இரவில் தூக்கம் வராத போது அல்லது அவசரமாக சில மெயில்களை அனுப்ப எண்ணுகையில் லேப் டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள். இவர்கள் பயன்படுத்த கம்பார்ட்மெண்ட்டில் இருக்கும் விளக்கினை ஆன் செய்வது மற்றவர்களின் தூக்கத்தினைக் கெடுக்கும். இவர்களுக்காகவே யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தால் எரியும் சிறு விளக்குகள் மார்க்கட்டில் கிடைக்கின்றன. இதற்குத் தனியே பேட்டரி தேவை இல்லை. இவை லேப்டாப்பின் பேட்டரியிலிருந்தே மின்சாரம் பெற்று மிதமான ஒளியைக் கொடுக்கும். கீ போர்டைக் காண இது போதும். பெரும்பாலும் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட குழாயில் தான் இவை இணைக் கப்பட்டிருக்கும். இதனால் நாம் மற்றவர் மீது ஒளி விழாமல் வைத்துப் பயன்படுத்தலாம்.
11. மல்ட்டிபிள் ஹெட் போன் ஜாக் (Multiple Head Phone Jack): நீங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ பயன்படுத்துபவராக இருந்தால் அதிக வால்யூம் வைத்துத் தான் கேட்க வேண் டியதிருக்கும். ஹெட் செட் இணைப்பதாக இருந்தால் ஒருவர் மட்டுமே கேட்க முடியும். எனவே நண்பர்களுடன், குடும்ப உறுப்பினர்களுடன் அனைவரும் ரசிக்கத் திட்ட மிட்டால் பல ஹெட்செட் ஜாக்குகள் உள்ள மல்ட்டிபிள் ஹெட் போன் ஜாக் ஒன்றை வாங்கி, முடிந்தால் நீளமான இணைப்பு வயருடன், பயன்படுத் துங்கள். இதனால் ஒரே நேரத்தில் பலரும் ரசிக்கலாம்; மற்றவர்களுக்கும் தொந்தரவு இருக்காது.

Tags: